வைரமுத்து
வைரமுத்துவின் கவிதைகள்
இறக்கமுடியாத சிலுவைகள்
சொன்னவள் நான் தான்!
உங்களுக்கும் சேர்த்து
நான் தான் சுவாசிக்கிறேன்
என்று சொன்னவள் நான் தான்!
உங்களைத் தவிர
என் கண்களுக்கு
எதையும் பார்க்கத் தெரியவில்லை
என்று சொன்னவள் நான் தான்!
உங்கள் வாழ்க்கை என்னும் கோப்பையை
என் உயிர் பிழிந்து ஊற்றி நிரப்புவேன்
என்று சொன்னவள் நான் தான்!
நம் கல்யாணத்தில்
கடல் முத்துக்களையும்!...
வானம் நட்ஷத்திரங்களையும்!...
அட்ஷதை போடும்
என்று சொன்னவள் நான் தான்!
நாம் பிரிந்தால்
மழை மேல் நோக்கிப் பெய்யும்!
கடல் மேல் ஒட்டகம் போகும்!
காற்று மரிக்கும்!
என்று சொன்னவள் நான் தான்!
இதோ அடிக்கோடிட்ட வார்த்தைகளால்
இதைச் சொல்வதும் நான் தான்!
என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!
நான் காதல் கொண்டது நிஜம்!
கனவு வளர்த்தது நிஜம்!
என் ரத்தத்தில்
இரண்டு அனுக்கள் சந்தித்துக் கொண்டால்
உங்கள் பெயரை மட்டுமே உச்சரித்தது நிஜம்!
என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!
காதலரைத் தெரிந்த எனக்கு
காதலைத் தெரியவில்லை!
இந்தியக் காதல் என்பது
காதலர்களோடு மட்டும் சம்மந்தப் பட்டதில்லை!
இந்தியா காதலின் பூமி தான்
காதலர் பூமியல்ல!
காதலுக்கு சிறகு மட்டுமே தெரியும்!
கால்யாணத்திற்குத் தான்
கால்களும் தெரியும்!
எனக்குச் சிறகு தந்த காதலா
என் கால்களின் லாடத்தை யாரறிவார்?...
என் தாயை விட
சாய்வு நாற்காலியை
அதிகம் நேசிக்கும் தந்தை!
சீதனம் கொணர்ந்த
பழைய பாய் போல்
கிழிந்து போன என் தாய்!
தான் பூப்பெய்திய செய்தி கூட
புரியாத என் தங்கை!
கிழிந்த பாயில் படுத்தபடி
கிளியோபாற்ராவை நினைத்து
ஏங்கும் என் அண்ணன்!
கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில்
கலர்க் கனவு காணும் என் தம்பி!
அத்தனை பேருக்கும்
மாதா மாதம் பிராணவாயு வழங்கும்
ஒரே ஒரு நான்!
கால்களில் லாடங்களோடு
எப்படி உங்களோடு ஓடி வருவேன்?...
என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!
ஐரோப்பாவில்
கல்யாணத் தோல்விகள் அதிகம்!
இந்தியவில்
காதல் தோல்விகள் அதிகம்!
இந்தியா காதலின் பூமி தான்!
காதலர் பூமியல்ல!
போகிறேன்!
உங்களை மறக்க முடியாதவளை
நீங்கள் மறப்பீர்கள்
என்ற நம்பிக்கையோடு போகிறேன்!
என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!
No comments:
Post a Comment